சுப்ரமணியபுரம் படத்தின் கதையும் திருடப்பட்ட கதையா?
சர்கார் படத்தை போலவே சுப்ரமணியபுரம் படத்தின் கதையும் திருடப்பட்ட கதை என வெண்ணிலா வீடு இயக்குநர் வெற்றி மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் தெரிவித்ததை அடுத்து, கதை திருட்டு பிரச்சனை பூதாகரமானது. கோர்ட்டுக்கு சென்ற விசயம் விஜய் தலையீட்டால், சமரசம் ஆனது. இந்நிலையில், வருண் ராஜேந்திரன் சாதித்துவிட்டார். ஆனால், என்னால் அவ்வாறு செய்யமுடியவில்லை என அரும்புமீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு, விசிறி ஆகிய படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சசிகுமார் இயக்கி நடித்த 2008ம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் தன்னுடைய சந்துரு எனும் படத்தின் கதை என மகாலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள பட போஸ்டரில், ஜெய், சூரி உள்ளிட்டோரும் நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சுப்ரமணியபுரம் படத்திலும் ஜெய் நடித்திருந்தார். ஜெய் மூலமாகவே இக்கதை திருடப்பட்டதா அல்லது சசிகுமாருக்கு எப்படி சந்துரு கதை சென்றது என்பது தெளிவாகவில்லை.
தனக்கு கிடைத்த கதையை 80களில் வரும் பீரியட் படமாக மாற்றி சுப்ரமணியபுரம் படத்தை சசிகுமார் எடுத்துள்ளதாக மகாலிங்கம் குற்றம்சுமத்தியுள்ளார்.
இதற்காக படம் ரிலீஸ் சமயத்தில் தான் போராடியாதாகவும், எனது கதையை நடிகர் சூர்யா பண்ண ஒப்புக்கொண்டதையும், பின்னர் சுப்ரமணியபுரம் ரிலீஸ் தனக்கு கொடுத்த அதிர்ச்சியையும் தற்போது கொட்டித் தீர்த்துள்ளார் மகாலிங்கம்.
ஒருத்தருக்கு தோன்றும் ஒரு கரு மற்றவருக்கும் தோன்றும் என்ற ஓட்டையை வைத்துக் கொண்டு கதை திருடர்கள் தப்பித்து விடுகின்றனர் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் புலம்ப தொடங்கியுள்ளனர்.