ஜடேஜா ஜாலம் 104 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்திய அணி!
இந்தியா – மேற்கிந்திய அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
திருவனந்தபுரத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால், அவரது கனவை இந்திய பந்துவீச்சாளர்கள் தவிடு பொடியாக்கினர். முதல் ஓவரிலேயே புவனேஷ்குமார், தொடக்க ஆட்டக்காரர் கிரண் பொவெலின் விக்கெட்டை தோனியின் உதவியுடன் வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, அந்த அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் 25 ரன்கள் அடித்தார். கலீல் அகமது பந்துவீச்சில், கேதார் ஜாதவ் அவரது கேட்சை பிடித்து விக்கெட் எடுத்தார்.
மற்றவீரர்களை தனது அபார பந்துவீச்சால் துவம்சம் செய்தார் ரவீந்திர ஜடேஜா. 4 விக்கெட்டுகளை எடுத்த அவர், மேற்கிந்திய அணியின் ஸ்கோரை முற்றிலுமாக முறியடித்தார்.
31.5 ஓவருக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 104 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்த எளிய ரன் சேஸிங்கை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.