தூத்துக்குடியில் தேசிய ஒற்றுமை தின மாரத்தான் ஓட்டம்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31, தேசிய ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராக திறம்பட பணியாற்றியவர். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர், சமஸ்தானங்களை ஒன்றிணைத்து அகண்ட இந்தியா உருவாவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ அணியினர் மினி மாரத்தான் ஓட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
காமராஜ் கல்லூரி முன்னாள் திருச்செந்தூர் சாலையில் காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.பிரகாஷ் கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் சாலை, புனித ஜார்ஜ் சாலை, விஇ சாலை மற்றும் தாமோதர் நகர் சாலை வழியாக மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. வேம்பார் மேல்நிலைப்பள்ளி மாணவர் அழகு கண்ணன் முதலிடத்தையும், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர் பார்வதி கண்ணன் இரண்டாமிடத்தையும், விளாத்திகுளம் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதவன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். வெற்றிபெற்றோருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி முதல்வர் டி.நாகராஜன், பேராசிரியர் தேவராஜ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்