பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகள் - கவர்னர் அதிரடி
தற்போதைய நிலையில், அரசியலில் கொள்கைகளே இல்லை. பெரும்பாலான அரசியல்வாதிகள், செல்வம் பெருக்கும் ஊழல்வாதிகளாக உள்ளனர் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின், 75ம் ஆண்டு நிறைவையொட்டி, சென்னை பல்கலையின் இந்திய வரலாற்று துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நாட்டின் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம்பெற்ற, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் கருத்தரங்கில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்துடன் நடந்த இந்த போராட்டத்தில், இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
சாதாரண பொதுமக்கள் தான், நாட்டின் எஜமானர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது.
உழைப்பு இல்லாத செல்வம்; மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி; நற்குணம் இல்லாத அறிவு; ஒழுக்கம் இல்லாத வணிகம்; மனிதாபிமானம் இல்லாத அறிவியல்; தியாகம் இல்லாத மதம்; கொள்கை இல்லாத அரசியல் போன்றவை, நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.
தற்போதைய நிலையில், அரசியலில் கொள்கைகளே இல்லை. பெரும்பாலான அரசியல்வாதிகள், செல்வம் பெருக்கும் ஊழல்வாதிகளாக உள்ளனர். எனவே, நல்ல கொள்கை பிடிப்பு உள்ள அரசியல்வாதிகள் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.