மொபைல் போனை பழுது நீக்க கொடுக்கிறீர்களா? உங்கள் பணம் களவு போகலாம்.
டெல்லியில் மொபைல் போனை பழுது நீக்க கொடுத்தவரின் பேடிஎம் கணக்கிலிருந்து 91,000 ரூபாய் களவாடப்பட்டுள்ளது.
டெல்லியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கால்கஜி என்ற இடத்தை சேர்ந்தவர் யூசுப் கரீம் (வயது 28). இவர் தனது பேடிஎம் கணக்கிலிருந்து 91 ஆயிரம் தன்னுடைய அனுமதியில்லாமல் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய மொபைல் போனை பழுது நீக்கியவர் மேல் சந்தேகம் இருப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.
பழுது நீக்கிய மொபைல் போனை வாங்கிய பிறகு, பேடிஎம் நிறுவனத்திலிருந்து 'யாரோ ஒருவர் உங்கள் கணக்கை பயன்படுத்த முயற்சிக்கிறார்' என்று மின்னஞ்சல் வந்ததாகவும், பின்னர் பேடிஎம் கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டதாகவும் யூசுப் தம் புகாரில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வேறு ஒரு எண்ணிலிருந்து தெரியாத கணக்கு ஒன்றிற்கு 19,999 ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏழு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 80,498 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக யூசுப் காவல்துறையிடம் கூறியுள்ளார். தன்னுடைய கணக்கிலான பரிவர்த்தனைகளை தடை செய்து நிறுத்தி வைக்கும்படி பேடிஎம் நிறுவனத்தை பலமுறை கேட்டுக்கொண்டும் அவர்கள் கணக்கை மூடவில்லை என்றும் யூசுப் தெரிவித்துள்ளார்.