2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
2019ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கி கடந்த 2016ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதி தங்களது மருத்துவர் கனவை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், 2019ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது.
இதற்கான விண்ணப்பத்தை, தேசிய தேர்வுகள் முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) இணையதளமான www.ntaneet.nic.in என்ற இணையதளத்தை நேற்று காலை முதலே ஏராளமானோர் பார்த்தனர். நேற்று மதியம் 12.30 மணி முதல் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். நவம்பர் 30ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
1994ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் பிறந்தவர்கள் பொதுப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.
மேலும் இதற்கான கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு கட்டணம் ரூ.1400 மற்றும் எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட சில பிரிவு கட்டணம் ரூ.750 கட்டணம் ஆகும். டிசம்பர் 1ம் தேதி வரை விண்ணப்ப கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம்.
மே மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், ஜூன் மாதம் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.