போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் தற்காலிக வாபஸ
தீபாவளி போனஸ், அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.43 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் பிஎப், பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு பலன்களை போக்குவரத்துக் கழக நிர்வாகம் முறையாக வங்கி கணக்கில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துவந்தது.
கடும் நிதி நெருக்கடி காரணத்தால், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.7000 கோடி தொகையை நிர்வாக செலவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கனவே தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதற்காக, பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாமல் இருந்தது. இறுதிகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், தீபாவளி அன்று வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பல்லவன் இல்லத்தில் நேற்று மாலை 5 மணியளவில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், தீபாவளி போனஸ், அட்வான்ஸ் தொகையை தமிழக அரசு வழங்கியதை அடுத்து, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று முடிவு செய்து அறிவித்துள்ளனர். இதனால், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.