பெற்ற குழந்தையை கைவிட்ட பெண் வக்கீல்!

சென்னையில் வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த பெண் வழக்குரைஞக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனை கழிப்பறையில் கைவிட்டு சென்ற அவரை காவல்துறையினர் கண்டு பிடித்தனர்.

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நவம்பர் 2ம் தேதி, வெள்ளிக்கிழமை அதிகாலை 12:40 மணியளவில் 27 வயது இளம்பெண் ஒருவர், தம் தாயுடன் வந்துள்ளார். அதிகமான வயிற்று வலி இருப்பதாக கூறிய அவருக்கு மருத்துவமனையில் வலி குறைக்கும் ஊசி போடப்பட்டது.

கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்ட அந்தப் பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் தரைத்தளத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் கழிப்பறை சென்று 20 நிமிடங்கள் கழித்தும் திரும்பி வராததால், அவருடைய தாயார் பார்த்து வர சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வலி குணமாகி விட்டதாக கூறி, இரண்டு பெண்களும் மருத்துவமனையை விட்டுக் கிளம்பியுள்ளனர்.

அதிகாலை 4:30 மணியளவில் மருத்துவமனை கழிப்பறையிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே பணியாளர்கள் கழிப்பறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஆண் குழந்தை கிடந்துள்ளது. உடனடியாக மருத்துவமனை சார்பில் சூளைமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.

காவல்துறையினர், கண்காணிப்பு கேமிரா பதிவுகள் மற்றும் மருத்துவமனையில் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேடி, அந்த இளம்பெண்ணை கண்டுபிடித்தனர். அவர் ஒரு வழக்குரைஞர் என்றும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால், என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை மருத்துவமனையில் கைவிட்டு வந்து விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, வக்கீலின் குடும்பத்தினர் குழந்தையை ஏற்றுக்கொண்டனர். அதை உரிய முறையில் பராமரிப்பதாக உறுதியும் அளித்துள்ளனர்.

 

More News >>