ஏடிஏம் கொள்ளையை தடுத்த பெண்ணுக்கு கமிஷனர் பாராட்டு!

பெண் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னையில் பணம் வழங்கும் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியை காவல்துறை தடுத்துள்ளது. அப்பெண்ணை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி பரிசளித்தார்.

சென்னை, ஆவடியை அடுத்த கொல்லுமேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுமதி (வயது 55). வெள்ளிக்கிழமை (நவம்பர் 2) அதிகாலை 2:30 மணிக்கு எழுந்த அவர், வீட்டின் முன்பு இருந்த ஏடிஎம் இயந்திரத்திற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றிருப்பதை கண்டார். உடனே தனது மகன் செந்தில் குமாரை எழுப்பியுள்ளார். செந்தில் குமார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை திரட்டிக்கொண்டு பணம் வழங்கும் இயந்திரத்தின் அருகே சென்றுள்ளார். 

ஏடிஎம் இயந்திரம் அருகே அதை உடைத்து திருட முயற்சித்தவரை உள்ளே வைத்து பூட்டிய பொதுமக்கள், ஆவடி டேங்க் தொழிற்சாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து ஏடிஎம் உள்ளே சிறைப்பட்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் பெயர் தீர்த்தமலை (வயது 35) என்று தெரிய வந்தது. விசாரணைக்குப் பின் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

உரிய நேரத்தில் தகவல் அளித்து கொள்ளையை தடுக்க உதவியதற்காக சுமதியை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

 

 

More News >>