ஆபாசம் படத்திற்கு ஏ சான்றிதழ்தான் கொடுப்போம் - சென்சார் போர்டுடன் மல்லுக்கட்டும் படக்குழு

கடந்த வாரம் '21 Months of Hell' என்ற ஆவணப் படத்தின் குழுவைப் போலவே, சென்சார் போர்டுடன் பிரச்சனை என்று அறிவித்திருக்கிறது ‘ஆபாசம்’ படக்குழு.

சுராஜ் வெஜ்ஜரமுடு, ரிமா கல்லிங்கல் ஆகியோர் நடித்திருக்கும் ‘ஆபாசம்’ என்ற மலையாள திரைப்படத்தை ஜுபித் நர்மதத் இயக்கியிருக்கிறார். காந்தி டிராவல்ஸ் என்ற பேருந்தில் நடைபெறும் கதையை இரண்டு விதங்களில் ‘ஆபாசம்’ படத்தில் பேசியிருக்கிறார்கள்.

ஒன்று இந்தச் சமூகத்தின் அழுக்கு நிறைந்த பக்கங்களும், மற்றொன்று அது தெரியாமல் அதைப் படித்துக்கொண்டிருக்கும் மக்களும்.

பேருந்தில் பயணிக்கும் பல தரப்பட்ட மக்களையும், பார்வையாளனாக நிறுத்தி அவர்களுடன் பேசுவதும், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுமாக நகரும் ஆபாசம் திரைப்படத்தின் சில வசனங்களை மியூட் செய்ய வேண்டும் என்று சென்சார் போர்டு கேட்டிருக்கிறது. அதன் பிறகும் 'ஏ' சான்றிதழ்தான் கொடுப்போம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

“எந்தப் படத்தை எடுக்க நினைத்தோமோ, அந்தப் படத்தைத்தான் எடுத்திருக்கிறோம். எதையும் நீக்கச் சொல்லாமல் படத்துக்கான சென்சார் கொடுங்கள். இப்படி நடைபெறும் எனத் தெரிந்தபிறகுதான் டைட்டிலை வைத்தோம்” என்று படக்குழு கேட்டிருக்கிறது.

அதற்கும் சென்சார் போர்டு சம்மதிக்காததால், ரிவ்யூ கமிட்டியிடம் முறையிட்டு நியாயம் பெறலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது படக்குழு.

“சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வதா அல்லது சொல்ல நினைத்த கதையையே ரசிகர்களுக்குக் கொடுப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டபோது, சுலபமானதாகத் தெரிந்தது இரண்டாவது வழிதான். எவ்வளவு தூரம் சென்றாவது சொல்ல நினைத்த கதையைச் சொல்வோம்.

எனவே, திட்டமிட்டபடி ஜனவரி 5ஆம் தேதி ஆபாசம் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. விரைவில் சென்சாரில் வெற்றிபெற்று உங்களிடம் படத்தைக் கொடுப்போம்” என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

More News >>