உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை: காவல் துறை அதிரடி

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாதம் சிறை என சென்னை போலீஸ் அதிரடியாக எச்சரித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது, தீபாவளி அன்று வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், தமிழகம் பொறுத்தவரையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு, நாடு முழுவதும் ஆதரவைவிட எதிர்ப்பு தான் அதிகளவில் உள்ளது. அரசியல் பிரமுகர்கள் முதல் பிரபலங்களும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. அதில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் இந்திய தண்டனை சட்டம் 188வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டடையும் சேர்த்து விதிக்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அறிவுரை வழங்கி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தப்படும்.

அனுமதியை மீறி பட்டாசு வெடிப்பவர்களை முதலில் எச்சரிக்கவும் தொடர்ந்து வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

More News >>