தமிழக பாரம்பரிய கோவில்களை பார்வையிட்ட துணை ஜனாதிபதி மகள் தீபா
நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் தீபா தனது தாய் உஷா மற்றும் குடும்பத்தினருடன் தமிழகத்தின் சிறப்பு மிக்க கோவில்களை பார்த்து ரசித்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோவில் பெருவுடையார் மற்றும் பெரிய நாயகி அம்மனை இன்று அவர்கள் தரிசனம் செய்தனர். மேலும் சமீபத்தில் மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வெங்கையா நாயுடுவின் மகள் தீபா
தஞ்சை பெரிய கோவில் வரலாற்று சிறப்பு மிக்க அற்புதமான கோவிலாகும். வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் நமது பாரம்பரியமிக்க கோவில்களையும் கலைநயம் மிக்க சிற்பங்களையும் காண நிறைய செலவுகளை செய்து பார்க்க வருகின்றனர்.
கோவிலில் உள்ள சிலைகள் தனி மனிதர்களுக்கு சொந்தம் அல்ல. அது நாட்டுக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானது. சோழர்களும், நாயக்கர்களும் இங்குள்ள கோவில்களை மிக சிறப்பாக வடிவமைத்துள்ளனர். கம்போடியாவில் சோழர்கள் கட்டிய பிரமாண்ட கோவில் பிரபலமானது.
மேலும் கோவில் சிலை திருட்டு செயல்களில் நிச்சயமாக இந்தியர்கள் ஈடுபட மாட்டார்கள். அவ்வாறு திருடுவது மிகவும் தவறான செயல். அப்படி திருடியவர்கள் தாமாக முன்வந்து சிலைகளை ஒப்படைக்க வேண்டும். யாரிடம் அப்படி சிலை இருந்தாலும் மீண்டும் கொடுத்துவிட வேண்டும்.
நாட்டின் பிரதமர் மோடி கூறியது போல ஒவ்வொருவரும் அவரவர் வேலையை அவரவரே செய்தாலே நாட்டில் எந்த பிரச்சனைகளும் வராது. குற்றங்களும் குறையும் என்றார்.
சபரி மலையில் பெண்கள் அனுமதிப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த துணை ஜனாதிபதி மகள் தீபா, சபரி மலை கோவில் கலாச்சாரத்தை மதிக்கும் ஒவ்வொரு பெண்ணும் இதனை ஆதரிக்க மாட்டார் என்றும் அப்படி மதிக்கும் பெண் கோவிலுக்கு செல்ல மாட்டார் என்று கருத்து தெரிவித்தார்.