மீண்டும் ராஜினாமா கடிதம் வழங்கிய இயக்குனர் பாக்கியராஜ்
நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள சர்கார் படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆனால், சர்கார் படத்தின் கதையும் கடந்த சில ஆண்டுகள் முன் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த செங்கோல் என்ற திரைப்படத்தின் கதையின் மைய கருவும் ஒன்றாக உள்ளது என்றும் தனது செங்கோல் திரைப்படத்தின் கதையை சர்கார் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படமாக எடுத்துள்ளார் என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், இதற்கு திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தனது கருத்தை பதிவு செய்தார்.
விசாரணையின் போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம் அடைந்து படத்தின் துவக்கத்தில் வருண் ராஜேந்திரன் பெயர் அட்டை போடுவதாக ஒத்துக்கொண்டார் என தெரியவந்துள்ளது.
இந்த சர்ச்சையில் பட கதை காரணமாக தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பாக்கியராஜ் ஏற்கனவே அறிவித்தார். சில அசவுகரியங்கள் ஏற்பட்டதாகவும், அதனால் தானே முன்வந்து தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார் பாக்கியராஜ்.
பாக்கியராஜின் ராஜினாமா கடிதத்தை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்க மறுத்துள்ளனர். நிர்வாகிகள் பலர் பாக்கியராஜ் தான் தலைவராக தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களின் முடிவே இறுதியானது என பாக்கியராஜின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் மீண்டும் பாக்கியராஜ் தனது ராஜினாமா கடிதத்தை எழுத்தாளர் சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். அவருக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.