திருச்சியில் மான்கள் உயிரிழப்பு பூங்கா மூடப்பட்டது

திருச்சி பாரத மிகு மின் நிறுவன (BHEL) பூங்காவில் 31 புள்ளிமான்கள் செரிமான கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளன.

இது பற்றி கூறப்படுவதாவது:பாரத் மிகு மின் நிறுவனத்தில் உள்ள பூங்காவில் மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 200 மான்கள் இங்கு வசித்து வந்தன. கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 1) இந்தப் பூங்காவில் உள்ள 20 புள்ளிமான்கள் மயக்கமடைந்து பின் உயிரிழந்தன. பின்னர் 11 மான்கள் அதேபோன்று உயிரிழந்தன.

மொத்தமாக மான்கள் உயிரிழந்த நிகழ்வு குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். இறந்த மான்களின் உடல்கள் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டன. அதில் செரிமான கோளாறு காரணமாக ஏற்பட்ட நோய்தொற்றின் காரணமாக மான்கள் உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

வழக்கமாக இந்தப் பூங்காவில் மான்களுக்கு வேப்பிலையும் புல்லும் உணவாக வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு வாரங்களாக அவற்றின் உணவு மாற்றப்பட்டு சௌண்டல் என்னும் சூபா புல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவு ஒத்துக்கொள்ளாமல் செரிமான கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எஞ்சியிருக்கும் மான்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருப்பதால் திருச்சி பாரத் மிகுமின் நிலைய பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது. நான்கு கால்நடை மருத்துவர்களை கொண்ட குழு மான்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது மிளகு மற்றும் உப்பு கலந்த கரைசல் மான்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. சூபா புல்லை அளவுக்கு அதிகமாக உண்ட மான்களை கண்டறிந்து உரிய மாற்று சிகிச்சை அளிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

மான்களின் பராமரிப்புக்கென்று நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், அருகிலிருந்த சூபா புல்லை மான்கள் விரும்பி சாப்பிடுவதை கண்டு அதை கொடுத்துள்ளனர். பராமரிப்பு ஊழியர்களின் அறியாமையே புள்ளிமான்களின் உயிருக்கு எமனாக அமைந்து விட்டது.

More News >>