ஆட்கொல்லி பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது

மஹாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால் பகுதியில் வெள்ளியன்று (நவம்பர் 2) இரவு அவனி என்னும் பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. இதுவரை 13 பேரை அது கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் திப்பேஸ்வர் புலிகள் சரணாலயத்தை சேர்ந்த பெண் புலி அவனி. இதை டி-1 என்றும் அழைத்தனர். 2012ம் ஆண்டுதான் முதன்முதலில் அவனி அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.

இது மனிதர்களை தாக்கிக் கொல்வதாக புகார் எழுந்தது. கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம், அவனியை கண்டதும் சுடுவதற்கு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து அவனிக்கு மன்னிப்பு வழங்கும்படி இணையத்தில் கோரிக்கை இயக்கம் (#letAvnilive) ஆரம்பமானது.

கடந்த மூன்று மாதங்களாக நவீன தொழில் நுட்ப உதவியோடு 150 களப் பணியாளர்கள், யானைகள் மற்றும் துப்பாக்கி வீரர்கள் ஆகியோர் அவனியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போரதி என்னும் பகுதியில் வேறொரு பெண் புலியின் சிறுநீர் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட வாசனை பொருள் ஆகியவை தெளிக்கப்பட்டன. அவனி அதை மோப்பம் பிடித்து வந்தது. வெள்ளியன்று இரவு ராலேகான் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல தனியார் துப்பாக்கி சுடும் வீரர் அஸ்கார் அலியால் புலி சுடப்பட்டது.

அவனியை உயிரோடு பிடிப்பதற்கு வனத்துறையினர் முயன்றதாகவும், அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் இருட்டின் காரணமாக அதை உயிருடன் பிடிக்க இயலாததால் சுட வேண்டிய அவசியம் நேர்ந்ததாவும் கூறப்படுகிறது. அவனிக்கு 10 மாத வயதுடைய இரண்டு குட்டிகள் உள்ளன.

காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 13 உடல்களில் 5 உடல்களில் உள்ள மரபணு ஆதாரம் அவனியுடன் பொருந்துவதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணித்து வரும் உயிரியல் வல்லுநர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் அவனியை தவிர ஒரே ஒரு ஆண் புலி மட்டுமே அங்கு உள்ளதாகவும் அதன் மரபணு மற்றுமொரு இறந்த மனித உடலுடன் பொருந்துவதாகவும் கூறுகின்றனர்.

அவனி மீது ஆட்கொல்லி என்ற பெயர் வலிந்து சூட்டப்பட்டு அது கொல்லப்பட்டுள்ளதாகவும், அது காட்டை விட்டு வெளியே வரவில்லை. மனிதர்களே அதற்கு தொந்தரவு கொடுத்தனர் என்றும் சுற்றுச்சூழல் மற்றும் வனஉயிர் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News >>