உடனடியாக பணிக்கு திரும்பாதவர்களை சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும்: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டுள்ளது.

அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில், திமுக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதில், தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முடிந்த நிலையில், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.அந்த உத்தரவில், “ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம் ஆகியே போராட்டங்களின்போதும் இதேபோன்று பல அறிவுறுத்தல்களை அரசுக்கு வழங்கி உள்ளோம். இது தொடர்பாக தமிழக அரசு வரும் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும்” என கூறினர்.

More News >>