108 மற்றும் 104 அவசர சேவைகள் பண்டிகை நாட்களிலும் இயங்கும்

பண்டிகை நாட்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் மற்றும் வெடிகளால் உருவாகும் புகையுடன் தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாமல் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதார துறையுடன் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இணைந்து 108 இலவச அவசரகால ஊர்தி சேவை மற்றும் 104 என்ற இலவச மருத்துவ ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் இந்த சேவைகள் எவ்வித தடையுமின்றி இரவு பகல் எந்நேரமும் இயங்கும் என்று ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி காலத்தில் தீக்காயங்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. அதுபோன்ற நேரங்களில் உதவும் வண்ணம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 104 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்வோரை ஊழியர்கள், தேவையின் தீவிரத்திற்கேற்றபடி மருத்துவர்கள் அல்லது செவிலியரின் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு உதவுவர். 108 என்ற தொடர்பு எண்ணுடைய ஆம்புலன்ஸ் சேவையை பொறுத்தமட்டில் சென்னை கோயம்பேடு, மாதவரம் மற்றும் பெருங்களத்தூர் அடுத்த சிறப்பு பேருந்து நிலையங்களிலும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆயத்த நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

936 ஆம்புலன்ஸ்களும் 41 இரு சக்கர அவசர வாகனங்களும் தமிழகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்திற்காக அவசர உதவி வாகனங்கள் சீர் செய்யப்பட்டு தேவையான மருத்துவ வசதிகளோடு நன்கு இயங்கும் நிலையில் இருப்பதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் போதுமான எண்ணிக்கையில் வாகனங்கள் இருப்பதாகவும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் கூறியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர உதவி தேவைப்படும் இடங்கள் அடையாளங்காணப்பட்டு அதற்கேற்பவும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

More News >>