இது வேற லெவல்: வைரலாகும் ஒராங்குட்டானின் சேட்டை!
போர்னியோ பூங்கா ஒன்றில் வளர்க்கப்படும் ஒராங்குட்டான் குரங்கு ஒன்று வேடிக்கையாக பழைய கிழிந்த கோணிப்பைக்குள் தன்னை மறைத்துக் கொண்டு சாக்கு ஓட்டம் ஓடுவது போல சக ஒராங்குட்டானை பயமுறுத்தி விளையாடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்துள்ள உலகின் மூன்றாவது மிகப்பெரிய தீவுதான் போர்னியோ. பழமை வாய்ந்த மழைக்காடுகளைக் தன்னகத்தே கொண்ட தீவு போர்னியோ. இங்குள்ள கினபாலு மலை என்பதே இத்தீவின் உயரமான மலையாக அறியப்படுகிறது.
இந்த மலைப்பகுதியில் பல்வேறு வகையான அரிதான மூலிகை தாவரங்களும், வன விலங்குகளும் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். மேலும் உலகின் நீளமான நிலத்தடி ஆறுகளுள் ஒன்று இங்குள்ளதாக அறியப்படுகிறது.
இங்குள்ள மான் குகையில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள் இருப்பதாகவும் கரப்பான் பூச்சிக் குகை என்றழைக்கப்படும் குகையில் லட்சக்கணக்கான கரப்பான் பூச்சிகள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தோனீசியா மற்றும் மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போர்னியோ தீவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒராங்குட்டான் குரங்குகள் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டுள்ளது அண்மையில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேட்டையாடுபவர்களால் மட்டுமல்லாது பயிர்களை அழிப்பதாலும் ஒராங்குட்டான்கள் கொல்லப்படுவதும், காட்டில் உள்ள மரங்களை காகிதத் தொழிற்சாலை, சுரங்கப்பணி உள்ளிட்ட பல்வேறு வகையான வணிக நோக்கத்திற்காக தொடர்ந்து வெட்டி வருவதால் இப்பகுதியில் வாழும் குரங்குகள் அழிவின் விளிம்புக்கு வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் வாழ்ந்து வரும் இந்த குரங்குகள் நயாரு மெண்டங் (Nayaru Menteng) என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் பாதுகாப்பான முறையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு அரங்கேறிய காட்சிகள்தான் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடியோவை காண கிளிக் செய்யவும்.
அழியும் அபாயத்தில் உள்ள இந்த குரங்கினத்தை மலேசியா, இந்தோனீசியா நாடுகளின் தலைவர்கள் கவனத்தில் கொண்டு குரங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க நடவடிக்கை வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.