ஜனவரியில் ஆந்திராவுக்கு புதிய உயர்நீதிமன்றம்

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் என்று இரு மாநிலங்களாக பிரிந்த பின்பு ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைவதற்கான சூழல் எழுந்துள்ளது.

2014ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி, தெலங்கானா, ஆந்திரா என்று இரு மாநிலங்கள் செயல்பட ஆரம்பித்தன. அப்போதைய தலைநகராக இருந்த ஹைதராபாத்தில் இருந்த உயர்நீதி மன்றமே இப்போதும் ஆந்திர பிரதேசத்திற்கான உயர்நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது.

புதிய தலைநகராக அமராவதி என்ற நகரை கட்டமைக்கும் முயற்சிக்கும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. புதிய தலைநகரில் ஜஸ்டிஸ் சிட்டி என்ற பெயரில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒரு பகுதி கட்டமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதில் உயர்நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை ஆணையங்கள் அமையவும் நீதிபதிகளுக்கான இல்லங்கள் கட்டப்படும். அது வரைக்கும் தற்காலிகமாக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஆந்திர அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசின் சார்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் பாலி நாரிமன், அமராவதி நகரில் நீதிபதிகளுக்கான இல்லங்கள் கட்டப்படும் வரைக்கும் தேவையான வசதி கொண்ட இல்லங்கள் வாடகைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, "தேவையான வசதிகள், ஏற்பாடுகள் இருக்கும் பட்சத்தில் தெலங்கானா உயர்நீதி மன்றத்தை, தெலங்கானா மற்றும் ஆந்திராவுக்கென பிரிப்பதற்கு தடையேதும் இல்லை. இதற்கான அறிவிக்கை 2019 ஜனவரி 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். அதிலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கான உயர்நீதி மன்றம் தனி கட்டடத்தில் இயங்கும்," என்று தெரிவித்தனர்.

ஆந்திர அரசால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, நீதிபதிகள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதை பொறுத்து மற்ற நடவடிக்கைகள் அமையும் என்று தெரிகிறது. ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக செயல்பட தெரிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விடும் என்று ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஆந்திரா உயர்நீதிமன்றம், இந்தியாவில் அமைய இருக்கும் 25வது உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>