பேருந்து படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த கர்ப்பிணி தவறி விழுந்து பலி: குழந்தை உயிர்தப்பியது
திருவனந்தபுரம்: பேருந்தில் நின்றபடி பயணம் செய்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண் தவறி வெளியே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும், பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை டாக்டர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஈராற்றுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாஷிதா (34). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தாஷிதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது, நேற்று முன்தினம் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டு அம்மாநில அரசு பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பேருந்தில் அதிகமாக கூட்டம் இருந்துள்ளது. தாஷிதா அமர யாரும் இருக்கை அளிக்காததால், பேருந்தின் படிக்கட்டு முனையில் நின்றுக் கொண்டிருந்தார். பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, சாலை வளைவு ஒன்றில் வேகமாக திரும்பியது. இதில் நிலை தடுமாறிய தாஷிதா பேருந்தில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில், தாஷிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தியதை அடுத்து, தாஷிதாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், தாஷிதாவுக்கு நேற்று காலை ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் தொடர்ந்து தாஷிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், தாஷிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில், அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு என தனி இருக்கை இருக்கும்போது அந்த பெண் அமர்வதற்கு வசதி செய்து கொடுக்காத கண்டக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.