புலியின் மீது டிராக்டர் ஏற்றிக்கொன்ற கிராம மக்கள்
தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவரை கொன்ற புலியை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தடிகளால் தாக்கியும், டிராக்டரை ஏற்றியும் கொன்றனர். உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிறு (நவம்பர் 4) அன்று இது நிகழ்ந்தது.
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது டுத்வா புலிகள் சரணாலயம். இந்தப் பகுதியின் வழியாக சென்று கொண்டிருந்த 50 வயது மனிதர் ஒருவரை அங்கிருந்த பெண் புலி தாக்கியது. காயமுற்ற அவர் பின்னர் உயிரிழந்தார்.
இதைக் கேள்விப்பட்ட கிராமத்தினர் திரண்டு சென்று, வனப்பகுதியினுள் இருந்த வன காவலர்களை தாக்கி அவர்களிடமிருந்து டிராக்டரை பறித்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள் காத்திருந்து புலியை தேடியுள்ளனர். புலி கண்ணில் பட்டதும், தடிகளால் தாக்கியும் டிராக்டரை ஏற்றியும் அதை கொன்றுள்ளனர்.
பத்து வயதான அந்தப் பெண் புலி, இந்தப் பத்து ஆண்டுகளில் யாரையும் தாக்கியதில்லை என்று வனத்துறை கூறியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் புலி தங்கள் கால்நடைகளை தாக்கி வந்ததாகவும், அது குறித்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வார காலத்திற்குள் மஹாராஷ்டிராவில் ஒன்றும் உத்தர பிரதேசத்தில் ஒன்றுமாக இரண்டு புலிகள் கொல்லப்பட்டதை குறித்து பெரிய விவாதம் எழும்பியுள்ளது.
புலியை தாக்கியவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்றும் டுத்வா தேசிய பூங்காவின் இயக்குநர் மஹாவீர் கொஜிலாங்கி தெரிவித்துள்ளார்.