ஓசோன் லேயரில் உள்ள ஓட்டை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது: ஐ.நா தகவல்
ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்திருக்கிறது.
சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் டிஎன்ஏ குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பது ஓசோன் படலம்.
பூமியில் இருந்து அதிகளவில் கார்பன் வெளியாகும் காரணத்தினால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, குளோபல் வார்மிங் எனப்படும் புவி வளிமண்டல வெப்பம் அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ம் தேதி ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா., அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் என்ற விஞ்ஞானி, ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதை கண்டறிந்தார். இதன்பிறகு, இதைக்கட்டுப்படுத்த உறுதிபூண்ட உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், மரம் வளர்ப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளால், ஓசோன் படல பாதிப்பு இருந்து மீண்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்துவிடும் என குறிப்பிட்டிருந்தது.