தீபாவளிக்கு ரோகித் சரவெடி சதம்(111) மேற்கிந்திய அணிக்கு பட்டை நாமம்!
லக்னோவில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய அணியை இந்திய அணி அபாரமாக வென்றது.
முதல் டி20 போட்டியில் தோல்வியை தழுவிய மேற்கிந்திய அணி, 2வது டி20 போட்டியில் படு தோல்வியை தழுவியது. லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் அதிரடி காட்டினர். ஷிகர் தவான், இந்த போட்டியிலாவது அரைசதம் கடக்கலாம் என ஆடினார் ஆனால், 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே விளாசி 43 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ரிஷப் பந்த் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த போட்டியிலும் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட்டானார். லோகேஷ் ராகுல் 14 பந்துகளில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகள் என அதிரடி காட்டி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உதவினார்.
மறுமுனையில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தீபாவளி வாணவேடிக்கை நிகழ்த்தினார். மேற்கிந்திய அணி பவுலர்களின் பந்துகளை எட்டு திசைக்கும் பறக்கவிட்டார். வெறும் 61 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் விளாசி தீபாவளி சிறப்பு ஆட்டத்தை ரசிகர்களுக்கு பரிசாக்கினார். மொத்தம் 111 ரன்கள் குவித்து, மேற்கிந்திய அணிக்கு பட்டை நாமம் போட்டார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
196 என்ற இமாலய இலக்கை எதிர்கொண்ட மேற்கிந்திய அணி இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 124 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் அதிக பட்சமாக டேரன் பிராவோ 23 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான புவனேஷ் குமார், கலீல் அகமது, பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், டி20 போட்டிகளில் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் படைத்துள்ளார்.