உலகநாயகனுக்கு 64 வயசு ஆகிடுச்சு!
உலகநாயகன் கமல்ஹாசனின் 64வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
1954ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் பரமக்குடியில் ஒரு மகா நடிகன் பிறப்பான் என யாரும் எண்ணவில்லை. தனது 6வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான கமல், முதல் படத்திலேயே ஜனாதிபதியிடம் தங்க பதக்கத்தை பரிசாக வென்றார். பல தேசிய விருதுகளை வென்றுள்ள நம்மவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இந்தியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்து புதிய சாதனையை கமல் நிகழ்த்தினார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ், ரஜினி என பல திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ள கமல், சிவாஜிக்குப் பிறகு நடிப்புலக சக்ரவர்த்தியாகவும், புதுமைகளை இந்திய சினிமாவுக்கு கொண்டு வரும் சினிமா போர்ட்டராகவும், எழுத்து, இயக்கம், பாடல், நடிப்பு என பல துறைகளிலும் கிங் மேக்கராகவும் விளங்கி வருகிறார்.
50 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை கொண்ட தனிச் சிறந்த நடிகர் கமல், சின்னத்திரையில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலமும் ஒவ்வொரு இல்லத்திலும் அங்கம் வகித்தார்.
இந்தியன் 2, தேவர்மகன் 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ள கமல், மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை ரஜினிக்கு முன்னரே தொடங்கி, அரசியலிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய திரையுலக ஜாம்பவான்களுக்கு கிடைத்த தமிழக சிம்மாசனம், கமல், ரஜினிக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், மக்களுக்கு உண்மைத் தொண்டனாக சேவை செய்தால், நிச்சயம் மக்கள் தலைவனாகலாம் என்பது முன்னோர்கள் விட்டுச் சென்ற வழி!
64 வயதில் அரசியலில் அடியெடுத்துள்ள ஆளவந்தான் விஸ்வரூபம் எடுத்து ஆள்வாரா என்பதை விரைவில் காண்போம்!