தமிழகம் மது விற்பனையில் மோசமான சாதனை: 3 நாட்களில் ரூ.330 கோடி வசூல்
தமிழகத்தில் தீபாவளி முன்னிட்டு கடந்த மூன்று நாட்கள் விடுமுறையில் ரூ.330 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி முன்னிட்டு, நவம்பர் 5ம் மற்றும் 6ம் தேதி விடுமுறை விடுத்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினமாக அமைந்தது.இந்நிலையில், நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு மது விற்பனை படுஜோராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, கடந்த 2016, 2017ம் ஆண்டைவிட தீபாவளி விடுமுறையான 4 நாட்களில் ரூ.350 கோடிக்கு மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், கடந்த மூன்று நாட்களில் மட்டும் மது விற்பனை ரூ.330 கோடியை எட்டியது.
இது கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.70 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு ரூ.260 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இந்த தீபாவளியன்று மது விற்பனையில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
சென்னையை பொருத்தவரை, தீபாவளி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.