கிராமப்புற பொருளாதாரத்திற்கு வில்லனான பணமதிப்பிழப்பு நடவடிக்கை
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. நடப்பிலிருந்த பணத்தில் 86 சதவீதம் ரூபாய் தாள்கள் மதிப்பை இழந்தன. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது.
இந்த நடவடிக்கையால், கிராமப்புறங்களில் விவசாய வேலைக்கான கூலி குறைந்தது, விவசாய விளைபொருட்களை நல்ல விலைக்கு பேரம் பேசும் ஆற்றலை விவசாயிகள் இழந்தனர். இந்த இரு விதங்களில் ஊரக பொருளாதாரம் பாதிப்படைந்தது. இந்தியாவின் பல்வேறு ஊரக பகுதிகளில் இந்த இரண்டு காரணங்களும் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகியுள்ளன.
விவசாய வேலைக்கான கூலி, விவசாயம் தவிர்த்த மற்ற வேலைகளுக்கான கூலி இவற்றிற்கிடையேயான விகிதம், ஊரக மற்றும் நகர்ப்புற உணவு பொருளின் வீக்கம் அல்லது மிகுதியில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே காணப்படும் வித்தியாசம் ஆகிய இரண்டு காரணிகளும் இதை உறுதி செய்யும்.
நகர்ப்புற மக்களின் கூலி பற்றி நம்பத்தகுந்த விவரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. கிராமப்புறத்தில் வழங்கப்படும் கூலியின் அளவை கொண்டே நகர்ப்புற பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. நகர்ப்புறத்தில் வேலையாட்களுக்கு எழும் அதிக தேவை, கிராமப்புறத்தினருக்கு, குறிப்பாக விவசாயம் சாராத தொழிலாளர்களின் கூலி அதிகரிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்குகிறது. மாறாக, விவசாயம் நன்றாக இருக்கும்போது நிலைமையில் மாற்றம் ஏற்படுகிறது; விவசாயம் சாராத வேலைக்கு வழங்கப்படும் கூலிக்கு சற்று நெருக்கமாகவே விவசாயவேலைக்கான கூலியும் உயருகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும்ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பத்து ஆண்டு கால ஆட்சியில் பெரும்பாலான காலங்களில் ஊரகப் பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சாராத வேலைக்கான கூலிகளுக்கு இடையேயான விகிதம் அதிகரித்துள்ளதை காண முடிகிறது. பண்ணைகளின் வளர்ச்சி, ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற காரணிகளால் இது தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
கிராமப்புற தொழிலாளர்கள், நகர்ப்புறங்களுக்கு பெயராமல் இருப்பதற்கு போதுமான கூலியை ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வழங்கியது என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதில் சற்று தொய்வு ஏற்பட்டது.
விவசாயத்தின் மீதான நாட்டத்தை குறைத்த நடவடிக்கைஇப்போதைய மத்திய அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் மழைப்பொழிவு குறைந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மழை குறையும்போது, விவசாய பணிகளும் குறைவது இயல்பான ஒன்று. வறட்சி நிலவும் வருடங்களில் தொழிலாளர்களுக்கான தேவையும் குறைகிறது. 2016ம் ஆண்டில் பெய்த மழையின் காரணமாக விவசாய வேலைக்கான கூலி அதிகரித்தது.
ஆனால், குறுகிய காலம் நிலவிய இந்த கூலி ஏற்றத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக முடக்கியது. 2016 டிசம்பர் முதலான ஐந்து காலாண்டுகளுக்கு இந்த விகிதம் ஏற்றமின்றி தொடர்ந்து, பின் சரிவை சந்தித்தது. பணமதிப்பிழப்புக்கு பின்னர், விவசாயத்தை தொழிலாளர்கள் விரும்பி நாடவில்லை.
நகர்ப்புறத்தில் தொழிலாளர்களுக்கு நிலவும் தேவையை, விவசாயம் சாராத தொழிலாளர்களுக்கு கிராமப்புறங்களில் கொடுக்கப்படும் கூலியை ஆதாரமாக கொண்டு கணக்கிட்டால், நகர்ப்புற பொருளாதாரத்திற்கு, ஊரக பொருளாதாரம் பெரிய போட்டியாக இல்லாதது தெரிய வரும்.
உணவு பொருட்களின் தயாரிப்பு கேந்திரம் கிராமங்களேஇந்த ஒப்பீட்டை உணவு பொருட்களை காரணியாக கொண்டும் கணக்கிடலாம். கிராம பொருளாதாரம், நகர் பொருளாதாரத்திற்கு அளிக்கும் பெரிய நுகர்பொருள் உணவு சார்ந்த தயாரிப்புகளே.
உணவுப் பொருள் சார்ந்த வீக்கம் அதிகமாகும்போது நகர்ப்புறத்திலிருந்து கிராமங்கள் லாபம் சம்பாதித்துள்ளன என்று அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் பண வீக்கத்தை அளவீடும் குறியீடாக பயன்படும் நுகர்வோர் விலை குறியீடு பயன்படுகிறது. சமீபகாலமாக உணவு சாரா பொருட்கள் சார்ந்தே பணவீக்கம் அதிகரித்துள்ளது.
உணவுப் பொருள் சார்ந்த வீக்கம், கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப் புறங்களில் விரைந்து அதிகரித்தால், விவசாயிகளுக்கு கிராமங்களை காட்டிலும் நகரங்களிலும் தங்கள் விளைபொருட்களை விற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதேபோன்று, உணவு பொருள் சாராத தயாரிப்புகளில் நகர்புறங்களில் ஏற்படும் வீக்கம், நகர்ப்புற பொருளாதாரத்திற்கு சாதகமாக விளங்கும்.
பணவீக்கம் - காலாண்டு கணக்குகள்
2012 மார்ச் முதலான காலாண்டுகளில் பணவீக்க எண் குறித்த ஆய்வு, 27 காலாண்டுகளுக்கு 21ல் ஊரக உணவுப் பொருள் சார்ந்த வீக்கம் நகர்ப்புற உணவுப் பொருள் சார்ந்த வீக்கத்திற்கு சமமாக அல்லது அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. அதே சமயம், உணவு சாராத பொருட்களின் வீக்கம் 27க்கு 26 காலாண்டுகளில் நகர்ப்புறத்திற்கு இணையாக அல்லது அதிகமாக இருக்கிறது.
இந்த தகவல், இந்திய கிராமப்புற பொருளாதாரத்தை விட நகர்ப்புற பொருளாதராத்திற்கு இருக்கும் பொதுவான கூடுதல் பலன்களை காட்டுகிறது.மேலே கூறப்பட்டுள்ளதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு மற்றும் பின்பான காலங்களுக்கான ஒப்பீட்டின்படி, 2012 மார்ச் மற்றும் 2016 செப்டம்பர் கால இடைவெளியில் உணவு சார்ந்த பொருள் வீக்க வளர்ச்சி, நகர்ப்புறத்தைக் காட்டிலும் கிராமப்புறத்தில் 26 சதவீதம் குறைவாக இருப்பதை காட்டுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்பு 2016 டிசம்பரில் பாதியாக அதாவது 13 சதவீதமாக குறைந்துள்ளது.
ஏற்கனவே வலிமை குறைந்திருந்த ஊரக பொருளாதாரத்தின் பேரம் பேசும் ஆற்றல், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இன்னும் குறைந்திருப்பதையே இந்த ஒப்பீடு காட்டுகிறது. விவசாயிகளின் பேரம் பேசும் ஆற்றல் ஏற்கனவே குறைவாகவே இருந்து வந்த நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதை மேலும் குறைத்துள்ளது கண்கூடாக தெரிகிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிராமப்புற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டள்ள அதிருப்தி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பொது தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.