தொடங்கியது கந்த சஷ்டி பெருவிழா... அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணியன் திருக்கோவில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் சிறப்பு மிக்க கோயிலாகும்.

ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக கந்த சஷ்டி திருவிழா இன்று பக்தர்களின் புடை சூழ தொடங்கியது.அதிகாலை முதல் பக்தர்கள், பாதை பூஜை, அங்கப்பிரதட்ணம்,விரதம் உள்ளிட்ட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சஷ்டி விழாவையடுத்து, அதிகாலையில் 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது, தொடர்ந்து காலை 1.30 மணிக்கு விஸ்வரூப பூஜையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுதல், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்க உள்ளன.

கந்த சஷ்டி விழாவின் இறுதியாக நடைபெறும் பிரசித்தி பெற்ற சூர சம்ஹார விழாவானது நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவையெட்டி காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் சமய சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

More News >>