ஐகோர்ட் உத்தரவை மீறி 3வது நாளாக தொடரும் போராட்டம்
சென்னை: தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவையும் மீறி 3வது நாளாக போராட்டம் தொடர்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபார்கருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, திமுக உள்பட முக்கிய 14 தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் இரவின் இருந்து பேருந்துகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், ஒரு சில பேருந்துகளே பேருந்து நிறுத்தத்திற்கு வருவதால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் ஆட்டோவில் செல்ல வேண்டியிருக்கிறது. இதை வாய்ப்பாக எடுத்துக் கொள்ளும் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். இதனால், பொது மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இன்று மூன்றாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.