சர்கார் படத்துக்கு எதிர்ப்பு அதிமுகவிற்கு ரஜினி, கமல் கண்டனம்!
சர்கார் படத்தின் சில காட்சிகள் அதிமுக அரசை கடுமையாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், படத்திற்கு தடை விதிக்கவும், திரையிடும் தியேட்டர்களை முற்றுகையிட்டும் அதிமுகவினர் நேற்று அலப்பறைகள் செய்தனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், ”முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என சர்கார் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் ஆதரவாக கருத்து பதிவிட்டார்.
சற்று நேரத்தில் சர்கார் பட சர்ச்சையை அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ”தணிக்கைக் குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, அந்த படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டு தனது ஆதரவை சர்கார் படக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாலேயே சர்கார் படத்திற்கு சப்போர்ட் செய்கிறார் என்ற கமெண்டுகளுக்கு அவரது ரசிகர்கள், மெர்சல் படத்திற்கு பிரச்சனை வந்த போதும் ரஜினி குரல் கொடுத்தார் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஒட்டுமொத்த திரையுலகமே சர்கார் படத்துக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது. சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளாக கருதப்படும் இலவச மிக்ஸி, கிரைண்டர்களை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் நீக்கப்பட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.