கடைசி டி20: ஸ்ரேயாஸ், சுந்தருக்கு வாய்ப்பு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கு அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களையும் விளையாட மேற்கிந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதுவரை நடைபெற்ற டெஸ்ட் தொடர், ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டி20 தொடர்களை மேற்கிந்திய அணி ஏற்கனவே இழந்து விட்டது.
இந்நிலையில், வரும் ஞாயிறு மாலை 7 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள கடைசி டி20 போட்டியை விளையாடவுள்ளது.
தொடர்ந்து 2 டி20 போட்டிகளில் அபாரமாக வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, கடமைக்காக இந்த மூன்றாவது டி20 போட்டியை விளையாடுகிறது. அதே சமயம், மேற்கிந்திய அணி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விடும் நோக்கில் தீவிர பயிற்சியில் உள்ளது.
கடந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படாத, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல். ராகுல் மற்றும் ரிஷாப் பன்ட்டுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி வரும் நவ.,21 முதல் பிரிஸ்பனில் நடைபெறவுள்ள போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த மூன்றாவது டி20 அந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இருக்கும் எனவும் பார்க்கப்படுகின்றது.