தீபாவளி எதிரொலி: சென்னையில் 95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது வெடித்த பட்டாசுகளால் சென்னையில் மட்டும் 95 டன் கழிவுள அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால், ஏராளமான பட்டாசு கழிவுகள் சாலை எங்கும் இருந்தன. பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சுமார்95 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இங்கு, தினசரி கொட்டப்படும் குப்பைகளை சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் தினமும் சேகரிக்கப்படும். இதைதவரி, பண்டிகை நாட்களில் குப்பை அகற்ற சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பை அகற்றும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக, சென்னை மாநகராட்சி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 19 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து, 40 டாடா ஏஸ் வாகனம் மூலம் சிறப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம், கடந்த 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை 95.06 டன் பட்டாசு கழிவுகள் சேரிக்கப்பட்டுள்ளன. இந்த கழிவுகளில் வெடி மருந்து உள்ள 58.97 டன் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் கும்மிடிப்பபூண்டி அருகே அபாயகரமான கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.