தலிபான்களுடன் பேச்சுவார்த்தையா? மத்திய அரசு மறுப்பு
தலிபான்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக இந்தியா, அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாஸ்கோவில் நடைபெறுகிறது.
இதில் ஆப்கான் அரசு பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக ஆப்கானின் அமைதி கவுன்சில் பங்கேற்கிறது. மேலும் தோகாவில் இருந்து செயல்படும் தலிபான்களின் அரசியல் அமைப்பும் இதில் பங்கேற்க உள்ளது.
தலிபான்கள் பங்கேற்கும் கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் இருவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து டெல்லியில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மாஸ்கோவில் நடைபெறுவது அதிகாரப்பூர்வம் அற்ற ஆலோசனைக் கூட்டம். ஆகையால் இந்திய அதிகாரிகள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக முடிவுக்கு வரக் கூடாது.
மாஸ்கோவில் நடைபெறுவது ஆப்கானிஸ்தான் தொடர்பானது மட்டுமே. ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையிலான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் நாம் ஆதரிப்போம் என்றார்.