கோமளவல்லி என்ற அம்முவே... ஜெ.வுக்கு எதிராக அன்று கர்ஜித்த இளங்கோவன்

ஜெயலலிதாவின் இயற் பெயர் கோமளவல்லியா? இல்லையா? என்கிற விவாதம் களைகட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொந்த பெயர் கோமளவல்லிதான் என முருகதாஸ் வழகில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் உண்மை பெயர் கோமளவல்லி என தெரியவந்தது பின்னணியில் ஒரு சுவாரசிய சம்பவம் இருக்கிறது. 2002-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.

டெல்லியில் துணை பிரதமராக அத்வானி பதவியில் இருந்தார். அப்போது ஆகஸ்ட் 14-ந் தேதி மதுரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் இணையும் விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார்.

அப்போது பேசிய சோனியா காந்தி, மக்கள் விரோத அரசை அதிமுக நடத்தி வருகிறது. இனி எந்த காலத்திலும் அதிமுகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம்; அடுத்த சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம் என முழங்கினார்.

இதையடுத்து சோனியா மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற ஜெயலலிதா, அத்வானியை சந்தித்து பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அச்சந்திப்பின் போதுதான் “ஆண்டோனியோமேனோ” என சோனியாவின் இயற்பெயரை உச்சரித்து விமர்சித்தார் ஜெயலலிதா.

டெல்லி பயணத்தைத் தொடர்ந்து சென்னை திரும்பிய போதும் ஜெயலலிதா இடைவிடாமல் சோனியாவை விமர்சித்தார். இதில் கடுப்பாகிப் போன அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “கோமளவல்லி அலையஸ் அம்மு" என்ற ஜெயலலிதா அவர்களே! என கிண்டலடித்தார்.

அப்போதுதான் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்பதை தமிழகம் அறிந்து கொண்டது.

 

More News >>