நிலா தனியாக இல்லை, பூமிக்குமேல் இன்னும் இரண்டு நிலாக்கள் கண்டுபிடிப்பு
சந்தமாமா என்று குழந்தைகளால் ஆசையாய் அழைக்கப்படும் நிலா தனியாக இல்லை என்றும் அதற்கு மேல் இன்னும் இரண்டு நிலாக்கள் உள்ளன என்றும் ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் முதல் இளவட்டம் வரை அனைவரையும் ஈர்க்கக்ககூடிய ஒன்று நிலா. கவிஞர்களின் செல்லக்குழந்தையும் நிலா தான். நிலாவை பற்றி பாடாத கவிஞர்கள் இம்மண்ணில் உண்டோ.
காதலன் தன் காதலியை பிரிந்து வாடினாலும் அவளின் முகத்தை நிலாவின் வடிவில் பார்ப்பவர்கள் ஏராளம்.இப்படி எண்ணற்ற செய்திகளை கொண்டது நிலா என கூறலாம்.
இதுவரை தனிமையாக இருந்த நிலவுக்கு துணை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். ஆம், நிலாவை தவிர்த்து பூமியின் மேல் இன்னும் இரண்டு நிலாக்கள் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
இவை இரண்டும் முழுக்க முழுக்க துகள்களால் உருவாகியுள்ளது என்றும் இந்நிலவுகளை ஒளிந்திருக்கும் அல்லது மறைந்திருக்கும் நிலவுகள் எனவும் அழைக்கின்றனர்.
எப்படி பூமியிலிருந்து நிலா சுமார் 2,50,000 மைல் தொலைவில் அமைந்துள்ளதோ, அதே போன்று இந்த இரண்டு நிலவுகளும், நம் நிலவிலிருந்து 2,50,000 மைல் தொலைவில் அமைந்துள்ளன என்பது ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.