ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம்: தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம்
அடையாறு கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாக இருந்ததால் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் ஆக்கிரமதிப்புகளை அகற்றவும், பல்வேறு தொழிற்சாலைகள் கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அடையாறு, கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொள்வதற்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் அவர் வெளியிட்ட உத்தரவில், தமிழக அரசின் பொதுப்பணித் துறை, முதன்மை செயலாளர் அளித்துள்ள அறிக்கை தெளிவற்று இருப்பதால், இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது உறுதியாகி உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு மெத்தனமாகவே நடந்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு கூறும் காரணத்தை ஏற்க முடியாது. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, அடையாறு, கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்பு அகற்றம், மாசு ஏற்படுவதை தடுக்கும் பணிகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் நேரடியாக பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தன்மாக இருந்த தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை பொதுப்பணித்துறை அடுத்த 15 நாட்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.