கேரளா பாணியில் அடுத்த மாவட்டத்தில் கழிவுகளை கொட்டி நாமக்கல் கோழி பண்ணைகள் அட்டூழியம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அழுகிய முட்டை கழிவுகள், இறந்த கோழிகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி செல்வது அதிகரித்து வருகிறது இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வேடசந்தூரை அடுத்த கல்வார்பட்டி அருகே அழுகிய முட்டை கழிவுகளை ஏற்றி வந்து நெடுஞ்சாலையில் கொட்டிய போது பொதுமக்கள் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

இது குறித்து கூம்பூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வாகனத்தை இயக்கியது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த துரைசாமி (42) என தெரிய வந்தது. இதையடுத்து துரைசாமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இறந்த கோழிகளை வாய்க்கால், குளம், குட்டைகள் உள்ளிட்டவற்றில் வீசி வரும் நிலையில், தற்போது கோழி முட்டைகளையும் ஆங்காங்கே வீசி செல்வதால் தொற்றுநோய் பரவும் அபயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தமிழக எல்லைகளில் கேரளாவில் இருந்து வந்து கழிவுகளை கொட்டுவது தொடர் கதையாகி வருகிறது. இப்போது தமிழகத்துக்குள்ளேயே மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து கழிவுகளை கொட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>