சிந்து விவகாரம்... அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக வலம் வரும் 80 பக்க டாக்குமெண்ட்!
தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை சிந்து என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்தி வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் 80 பக்க ஆவணம் வலம் வருகிறது.
சிந்து என்ற பெண்ணுடன் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பிருப்பதை வெளிப்படுத்துவதாக கூறி ஆடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதை அமமுக தரப்பினரே வெளியிட்டிருந்தனர்.
ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்திருந்தது. இப்பிரச்சனையை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் ”அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் தொடர்புபடுத்தி பேசப்படும் சிந்து என்ற பெண் யார்? அவரது தாயார் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்” என்ற பீடிகையுடன் 80 பக்க பிடிஎப் ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில் சிந்துவும் அவரது தாயாரும் யார் யாரிடம் பணம் கேட்டு மிரட்டினார்கள்? பாலியல் விவகாரத்தை முன்வைத்து எப்படி பேரம் பேசினார்கள்? இது தொடர்பாக போலீஸ் புகார் ஆவணங்கள், புகார் கொடுத்தவற்றை திரும்பப் பெற்ற ஆவணங்கள், நீதிமன்ற வழக்கு விவரங்கள், தொலைபேசி உரையாடல் நேரங்கள் என மலைக்க வைக்கும் வகையில் ஏராளமான ஆவணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
தற்போது இந்த 80 பக்க ஆவணம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.