அசாம் மருத்துவமனையின் அவலம்: 9 நாட்களில் 15 குழந்தைகள் பலி
அசாம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலைத்தில் உள்ள ஜோர்கட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்காக சிறப்பு சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளது. இங்கு, ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிறப்பு சிகிச்சை பிரிவில் கடந்த 9 நாட்களில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகளின் அடுத்தடுத்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த மருத்துவ துறையின் இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் இறப்புக்கு மருத்துவமனை காரணமில்லை என்று கூறும் அதன் நிர்வாகம் விசாரணைக்கு 6 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
குழந்தைகளின் இறப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. உடல் எடை குறைந்து பிறந்த 10 குழந்தைகள் இதில் இறந்துள்ளதாகவும், மீதமுள்ள குழந்தைகளுக்கு இதய பாதிப்பு இருந்ததால் அதனால் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அசாம் மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் வருவதால் நோய் தொற்று ஏற்பட்டு கூட குழந்தைகள் இறந்திருக்கக்கூடும் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.மருத்துவத் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் விசாரணையின் முடிவில் தான் குழந்தைகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.