காதலின் உச்சம்: மனைவிக்காக மினி தாஜ்மகால் கட்டியவர் விபத்தில் சாவு
புற்றுநோயால் இறந்த தனது மனைவிக்கு மினி தாஜ்மகால் கட்டியவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம், புலாந்சாகர் மாவட்டம், காசர் காலன் கிராமத்தைச் சேர்ந்தவர் பைசுல் ஹசன் கதரி (83). ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டரான இவருக்கு தாஜ் முல்லி பேகம் என்ற மனைவி இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த தாஜ் முல்லி பேகம், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மனைவி மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்த பைசுல், ஷாஜகான் மும்தாஜ்க்கு தாஜ்மகால் கட்டியதுபோல், காதல் மனைவி தாஜ் முல்லிக்கு ஒரு மினி தாஜ்மகால் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி, தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியை தேர்வு செய்து முல்லியின் உடலை அங்கேயே புதைத்தார். பின்னர், அங்கு தாஜ்மகாலை கட்ட முடிவு செய்த பைசுல், அதற்கான கட்டுமான பணிகளை தொடங்கினார். ஆனால், பொருளாதார நெருக்கடியால் மினி தாஜ்மகால் கட்டுமான பணிகள் முழுவதும் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற பைசுல் திடீரென வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, மினி தாஜ்மகாலின் உள்ளே புதைக்கப்பட்டுள்ள காதல் மனைவி தாஜ் முல்லியின் சடலத்தின் அருகேயே பைசுலின் உடலும் புதைக்கப்பட்டது. மனைவிக்காக ஆசையாக கட்டிய மினி தாஜ்மகாலின் உள்ளேயே பைசுலின் உடலும் புதைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.