லாசோ - ஃபேஸ்புக்கின் புதிய வீடியோ செயலி
சிறு ஒளிப்பதிவுகளை பகிரும் வண்ணம் லாசோ (Lasso) என்ற புதிய செயலியை அமெரிக்க பயனர்களுக்கு ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலியில் வீடியோக்களை எடிட் செய்யவும், எழுத்துகள், இசை ஆகியவற்றை சேர்க்கவும் வசதி உள்ளது. இந்தச் செயலியில் உள்ளவர்களின் விவரங்கள் (profiles) மற்றும் பகிரப்படும் ஒளிக்கோவைகள் அனைத்துமே பொதுவெளியில் கிடைக்கும். இந்தச் செயலி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என்ற இரு இயங்கு தளங்களிலும் கிடைக்கிறது. ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்தி இதனுள் நுழையலாம். லாசோ என்னும் இந்தச் செயலியிலிருந்து ஃபேஸ்புக் கணக்குக்கு ஒளிக்கோவைகளை பகிர முடியும்.
ஸ்நாப்சாட் மற்றும் யூடியூப் என்ற ஒத்த தளங்களுக்குப் போட்டியாக ஃபேஸ்புக் இதை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்க இளம் தலைமுறையினரில் 69 விழுக்காட்டினர் ஸ்நாப்சாட்டையும், 72 விழுக்காட்டினர் இன்ஸ்டாகிராமையும் 85 விழுக்காட்டினர் யூடியூப்பையும் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனராம்.
கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் ஆன்ட்டி ஹூவாங், லாசோ வெளியீட்டை குறித்து தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பெரிய அளவில் அறிமுக விழா இல்லாத நிலையில் மற்ற நாடுகளில் இது எப்போது கிடைக்கும் என்ற தகவலும் தெரிவிக்கப்படவில்லை.