டி20 கிரிக்கெட் போட்டி: சென்னை சேப்பாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால், அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கமா எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது.
இதை முன்னிட்டு, சேப்பாக்கம் சாலையில் இரவு 9.30 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பெல்ஸ் சாலை தற்காலிக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பாரதி சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறகு, வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலை நோக்கி வரும் வாகனங்களில் எம்டிசி மற்றும் உரிய அனுமதி அட்டை உள்ள வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாரதி சாலையிலிருந்து கெனால் சாலை ஒரு வழி பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து வாகனங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள், கார்கள், வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக சென்று கடற்கரை உட்புறச் சாலையில் பார்க்கிங் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.