தினகரன் அண்ட்கோவுக்கு பெங்களூரு சிறையில் சசிகலா செமடோஸ்- Exclusive
பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 10 எம்.எல்.ஏக்களிடம் சசிகலா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென மேல்முறையீடு செய்யப் போவதில்லை என தினகரன் தரப்பு முடிவெடுத்தது. இதனால் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தரப்பு பொறுப்பாளர்களை நியமித்து களப் பணிகளைத் தொடங்கிவிட்டது. தினகரனின் அமமுகவும் 18 தொகுதிகளில் வெல்வதற்கான வியூகம் வகுத்திருக்கிறது.
இந்த 18 தொகுதிகளில் 10-ஐ கைப்பற்றினாலே ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது திமுக தரப்பின் கணக்கு. இதனிடையே தினகரனும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 10 பேரும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மேல்முறையீடு செய்யாததை சசிகலா வரவேற்றார் என கூறியிருந்தார். இது தொடர்பாக அமமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, மேல்முறையீடு செய்யப் போவதில்லை என தினகரன் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டதாக சசிகலா கோபப்பட்டிருக்கிறார்.
சசிகலாவைப் பொறுத்தவரையில் தினகரன் தனிக்கட்சி தொடங்கியதை இன்னும் ஏற்கவில்லையாம். ஏற்கனவே முதல்வர் எடப்பாடியார் தரப்பு சசிகலாவுக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறது. சசிகலாவை பொறுத்தவரையில் அதிமுகவை பிடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
இதனால் தினகரனிடம், நீங்களே முடிவெடுத்து அறிவிப்பீங்க... அப்புறம் எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க என கடுமை காட்டினாராம். இதுதான் பெங்களூரு சிறையில் நடந்தது என்கின்றன அமமுக வட்டாரங்கள்.
-திலீபன்