கலிபோர்னியா காட்டுத் தீ- பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு- அதிகாரிகள் மீது டிரம்ப் பாய்ச்சல்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்த காட்டு தீ ஏற்படுவதற்கு வனத்துறையினரே காரணம் என குற்றம்சாட்டி அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனப்பகுதியில் பயங்கர தீ பரவியது. அடுத்தடுத்து 3 இடங்களில் காட்டுத் தீ பிடித்ததால் பல்லாயிரம் ஏக்கர் வனப்பரப்பு நாசமானது.
இன்னமும் காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்திருக்கிறது.
கலிபோர்னியாவின் பாரடைஸ் நகரம் முதலில் பெரும் சேதங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன.
இதையடுத்து பல லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். கலிபோர்னியாவின் வரலாற்றில் மோசமான காட்டு தீ என கூறப்படுகிறது.
இதனிடையே இக்காட்டு தீ ஏற்பட வனத்துறையினரின் அலட்சியமே காரணம் என அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். மேலும் வனத்துறையினருக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், இவ்வளவு கோரமான மிகப் பெரும் தீ விபத்துக்கு வனத்துறையின் மோசமான நிர்வாகத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. ஆண்டுதோறும் பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டும் பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருக்கின்றன.
வனத்துறையினர் இதற்குத் தீர்வு காணாவிட்டால் நிதி உதவியை நிறுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.