இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். தீவிர ஆதரவாளர் சச்சிதானந்தத்துடன் திருமாவளவன் சந்திப்பு- வெடிக்கும் புதிய சர்ச்சை
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாளவன், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இயக்கமான சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்ததை சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
தமிழகத்தில் நீண்டகாலம் தங்கியிருந்தவர் ஈழத்தைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம். சென்னையில் காந்தளகம் என்ற பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிட்டு ‘இந்துக்கள்’ என்ற பெயரில் கருத்துகளை வெளியிட்டு வந்தார் மறவன்புலவு சச்சிதானந்தம். இதன்பின்னர் சிவசேனை என்ற பெயரில் இந்துத்துவா இயக்கத்தையும் சச்சிதானந்தன் தொடங்கினார்.
தமிழகத்தில் நடமாடும்போது வெள்ளை ஜிப்பாவில் வலம் வரும் சச்சிதானந்தம், ஈழத்தில் காவி உடை தரித்தே வலம் வருபவர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சச்சிதானந்தம், இங்கு 1990-ம் ஆண்டு முன்னர் மாட்டிறைச்சி கடைகள் இருந்தது இல்லை.
இந்த மண்ணுக்கு நேற்று முந்தாநாள் வந்தவர்களே மாட்டிறைச்சி கடை வைத்திருக்கின்றனர். இலங்கை என்பது இந்து பூமி அல்லது பெளத்த பூமி.
வேறு எந்த மக்களுக்கும் இது சொந்தமானது அல்ல. இதை நாங்கள் தெளிவாக சொல்லுகிறோம். எங்கள் மரபுகளுக்கு அமைய வாழ முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள். நீங்கள் விருப்பமான நாட்டில் இருந்து கொள்ளுங்கள். திருகோணமலையில் ரம்ஜான் நோன்புக்காக 6 மாடுகள் திருடப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்தியாவில் இந்துத்துவா அமைப்புகள் மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்பதற்காக அப்பாவிகளை படுகொலை செய்கின்றன. அதே பாணியில் சச்சிதானந்தன் பேசியிருந்தார். இதனால் அவரது இந்துத்துவா முகம் பகிரங்கமாக அம்பலமானது.
பின்னர் சிவசேனை அமைப்பு தொடர்பாக இலங்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சச்சிதானந்தனுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதனடிப்படையில் கடந்த மாதம் சச்சிதானந்தத்திடம் விசாரணை நடத்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், சிவசேனை அமைப்பின் நோக்கம், வெளிநாட்டு நிதி உதவி, அவரது வெளிநாட்டு பயண விவரங்கள் என பலவற்றையும் வாக்குமூலமாகப் பெற்றது.
சிவசேனை தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் முன்னர் வெளியிட்டிருந்த கருத்து:
இந்நிலையில் இலங்கைக்கு சென்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மரம் நடுதல் விழா உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியையும் பார்வையிட்டார்.
மேலும் இந்துத்துவா வெறியை கக்கும் சச்சிதானந்தத்தையும் திருமாவளவன் சந்தித்து பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்துத்துவாவை கடுமையாக எதிர்க்கும் திருமாவளவன், சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் படுதீவிர ஆதரவாளரான சச்சிதானந்தத்தை சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
ஏற்கனவே இறுதி யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்கு சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம் பெற்றிருந்தார். அப்போது அதிபராக இருந்த ராஜபக்சேவை திருமாவளவன் சந்தித்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.