சபரிமலையில் பெண்கள் அனுமதி வழக்கு: மறு சீராய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 48 மறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, மதம் சார்ந்த பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த எதிர்ப்புகளையும் மீறி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பெண்கள் சிலர் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டங்கள் வலுவடைந்து வந்ததால் பதற்றமான சூழல் உருவாகியது.

இந்நிலையில், சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை திரும்பப் பெண வேண்டும் என்றும் மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட 48 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெறுகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இன்றைய உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பிறகு வரும் 16ம் தேதி மண்டல - மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளதால், மீண்டும் பிரச்னை ஏற்படாமல் இருக்க கருத்தொற்றுமையை ஏற்படுத்தவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

More News >>