கீழடியைப் போல குஜராத்திலும் அகழாய்வு அவசியம் ஏன்?
”தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் பெரிதாக அகழ்வாய்வுகளைச் செய்யவில்லை. திராவிடக் கருதுகோள்களின் அடிப்படையில் நாம் ஆய்வுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அந்த ஆய்வை குஜராத், மகாராஷ்டிரா, சிந்து, கங்கைச் சமவெளி, வைகைச் சமவெளி என எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்”
- அண்மையில் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேர்காணலில் சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் தெரிவித்த கருத்து இது.
சிந்து சமவெளி பகுதிகளில் தமிழ் இடப்பெயர்களை ஆய்வு செய்து உலகத் தமிழர்களை வியப்பில் ஆழ்த்தியவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி அகழாய்வுகளைப் போல வைகை சமவெளிகளில் அகழாய்வு அவசியம் என வலியுறுத்தி வருகிறார்.
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது ஆர். பாலகிருஷ்ணன் தமது முக நூல் பக்கத்தில் இப்படி எழுதினார்
”கீழடியைச் சேர்ந்த முருகன் சிந்துவெளிக்கு மீண்டும் போகிறான் தேர்வு எழுத! வரலாறு திரும்புகிறது”
என்பதுதான் அப்பதிவு.
பாகிஸ்தானில்தானே சிந்துசமவெளி எச்சங்கள் இருக்கின்றன... சரி நமக்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு? குஜராத்தில் அகழாய்வு செய்ய அப்படி என்ன இருக்கிறது?
ஆம் நிறையவே இருக்கிறது... நம் ஆதி தமிழர்களின் வாழ்விடங்களில் ஒன்றாக நிச்சயம் குஜராத் பெருநிலப்பரப்பு இருந்திருக்கக் கூடும் என்பதற்கான எச்சங்களும் வரலாற்று சான்றுகளும் நிரம்பிக் கிடக்கின்றன.
குஜராத்தின் கட்ச்- பூஜ்.. இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம். கட்ச் பகுதியில் பெரும்பாலான இடங்கள் கைவிடப்பட்ட பிரதேசங்களாகவே இருக்கின்றன.
இந்திய மண்ணுக்கே தொடர்பில்லாத ஐரோப்பிய முகங்கள்கூட அகதிகளாக குடிசைகளில் வாழ்வதைப் பார்க்க முடியும்.
கட்ச் மாவட்டத்தின் தலைநகர் பூஜ்.
இது ஆதி தமிழர்களான நாகர்கள் வாழ்ந்த பூமி என்கிறது கட்ச் பிராந்தியத்தின் வரலாறு. பூஜ் என்பது கட்ச் மொழியில் நாகர்களைக் குறிக்கிறது. இங்கே இருக்கும் பூஜ் மலை என்பது நாகமலைதான்.
பூஜ் மலை அடிவார கிராமங்களில் இன்னமும் நாக வழிபாடு பின்பற்றப்படுகின்றன.
இந்த பூஜ் நகரத்தில் இருந்து வடதிசையில் சுமார் 200 கி.மீ தொலைவில் இருக்கிறது தோலவீர.
4 மணிநேர பயணத்துக்குப் பின் தோலவீரவை அடைய முடியும்.தோலவீர.... இதுவும் கைவிடப்பட்ட இடம்தான்.. ஆனால் தமிழர் வரலாற்றின் போற்றுதலுக்குரிய இடம்தான்.
ஆம் இது சிந்து சமவெளியின் எச்சம்.. நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு பழந்தமிழர் நகரத்தின் எச்சம் இது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய இடம்.
பூஜ் நகரத்தில் இருந்து 130 கி.மீ தொலைவில் இருக்கிறது லக்பதக் கோட்டை. இந்த கோட்டையை நெருங்க நெருங்க நம் மனதை பிசையக் கூடிய ஏராளமான தடயங்கள்... ஒரு வறண்டு போய்விட்ட நதியின் மணலும் அதனுள் புதைந்துகிடந்த நதிசார் பொருட்களும் எங்கெங்கும் பரவிக் கிடக்கின்றன.
இந்த சூனிய பிரதேசத்தில் ஆகப் பெரும் வரலாற்றின் சாட்சியமாக நிற்கிறது லக்பதக் கோட்டை. 250 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த இடம். மேற்கு ஆசியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக ரான் ஆப் கட்ச்சை கடந்து இப்பகுதியில்தான் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
இங்கே வர்த்தகத்துக்காக தனியே நாணயங்களும் கூட அச்சடிக்கப்பட்டிருந்த வரலாறும் இதற்கு உண்டு.
லக்பதக் கோட்டையின் முகப்பில் இந்திய தொல்லியல் துறை வைத்திருக்கும் ஒரு தகவல் பலகைதான் தமிழர் வரலாற்றை சொல்லி நிற்கிறது.
இது சிந்து நதி ஓடிக் கொண்டிருந்த பகுதி. 19-ம் ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கமானது சிந்து நதியை அப்படி மடைமாற்றி கடலுக்குள்ளும் பாகிஸ்தானுக்குள்ளும் கொண்டு சென்றுவிட்ட துயரத்தைத்தான் அந்த தகவல் பலகை சொல்கிறது.
இப்படி குஜராத்தின் கட்ச் பகுதி நாகர்கள், சிந்துவெளி நகரமான தோலவீர, சிந்து நதி என பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இங்கேதான் என்றில்லை... குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள லோதலும் சிந்துசமவெளியின் சான்றாக இருக்கிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இவற்றை ஒட்டிய குஜராத் இன்றளவும் சிந்து சமவெளியின் சான்றாதாரங்களைத் தாங்கி நிற்கின்றன. இங்கிருந்துதான் ஆதி தமிழர்கள் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஷா என இடம்பெயர்ந்து மலைகளில் பழங்குடிகளாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். ஒடிஷாவின் கோண்ட் பழங்குடிகளின் பூர்வீகத்தைக் கேட்டால் தாங்கள் மத்திய பிரதேச மலைகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்றே சொல்கின்றனர்.
ஆகையால்தான் சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் போன்ற அறிஞர்கள் குஜராத்திலும் அகழாய்வு அவசியம் என்பதை வலியுறுத்துகின்றனர்.
முன்னத்தி ஏர்கள் முன்மொழிந்ததை முன்னெடுப்பது யார்?