இந்த ஆஃபர் உங்களுக்குத்தான்! - சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு தினகரன் வலை- Exclusive

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை அசைக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் தினகரன். ` கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முக்கிய விக்கெட் ஒன்றை வீழ்த்த இருக்கிறார் தினகரன். டிசம்பருக்குள் அ.ம.மு.க பக்கம் நான்கு விக்கெட்டுகள் வந்துவிடும்' என்கின்றனர் டி.டி.வி தரப்பினர்.

ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியைத் தக்கவைக்கும் விதத்தில் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் தினகரன். ஆளும்கட்சிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது, மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது என வலம் வந்தாலும், மாநிலம் முழுக்க செல்வாக்கு இல்லாததை உணர்ந்து வைத்துள்ளனர் அக்கட்சி நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்தாலும், பணத்தைக் கண்ணில் காட்டாததால் பலரும் சோர்ந்து போய் உள்ளனர்.

` ஒவ்வொரு கூட்டத்துக்கும் நாங்கள் செலவு செய்கிறோம். பத்து பைசாவைக்கூட நீங்கள் கண்ணில் காட்டவில்லை. தேர்தலுக்குள் கடன்காரனாகி தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்' எனப் பலரும் புலம்பத் தொடங்கிவிட்டனர்.

'இதே நிலை நீடித்தால் தொண்டர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்துவிட நேரிடும்' என்பதை உணர்ந்து, சில அதிரடி வியூகங்களை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார் தினகரன்.

இதைப் பற்றிப் பேசும் அ.ம.மு.க நிர்வாகிகள், "18 முன்னாள் எம்.எல்.ஏக்களின் செலவுகளையும் விவேக் தான் கவனித்து வருகிறார். 'தங்களை நம்பி வந்தவர்களைத் தவிக்கவிடக் கூடாது' என சசிகலா கூறிவிட்டார். இந்த முன்னாள் எம்.எல்.ஏக்களில் பலர், மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை.

'ஜக்கையனைப்போல மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் ஏற்றுக் கொள்வார்களா?' என தங்களுக்குள் பேசி வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமே தினகரனுக்கு சாதிரீதியான செல்வாக்கு இருக்கிறது. வேலூர், கொங்கு மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு இல்லை.

இங்கெல்லாம் ஆளும்கட்சியே பலத்தில் இருக்கிறது. தவிர, வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் வீரமணியால் சீட் வாங்கி வெற்றி பெற்ற குடியாத்தம் ஜெயந்தி, சோளிங்கர் பார்த்திபன் ஆகியோர் தினகரன் டீமில் ஐக்கியமாகிவிட்டனர்.

இவர்கள் மீண்டும் போட்டியிட்டால், வீரமணியே அவர்களை வீழ்த்துவார் என்ற அச்சமும் அ.ம.மு.க நிர்வாகிகளிடம் உள்ளது. எனவே, 'மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கிடைப்பது சிரமம்' என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

ஆனால், தினகரனோ, மொத்த அ.தி.மு.கவும் நம்பக்கம் வரப் போகிறது' எனப் பேசி வருகிறார். இதனைக் கட்சி நிர்வாகிகள் பலரும் நம்பவில்லை. 'இந்த அதிருப்தியை ஈடுகட்ட வேண்டும் என்றால், அ.தி.மு.கவில் இருந்து நான்கு எம்.எல்.ஏக்களை இழுத்தால் மட்டுமே முடியும். சிட்டிங் எம்.எல்.ஏக்கள் நம்பக்கம் வந்தால், அ.தி.மு.கவின் செல்வாக்கு சரிந்துவிடும்' எனக் கணக்கு போடுகிறார் தினகரன்.

அப்படி வருகிறவர்களுக்கு 40 சி உள்பட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இந்தப் பணிகளைச் செய்து முடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதனை உளவுத்துறை மூலம் அறிந்து, அதிருப்தி எம்.எல்.ஏக்களைச் சரிகட்டும் வேலைகளைச் செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர்.

- அருள் திலீபன்

More News >>