அரசியலில் ரஜினி ஜூரோவா? மக்கள் முடிவு செய்வார்கள்- ஜெயக்குமார் அடடே பதிலடி
ரஜினியின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "அரசியலில் ரஜினி ஹீரோவா அல்லது ஜூரோவா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ரஜினிகாந்த்திடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருப்பது பற்றி கேள்வி கேட்டபோது யார் அந்த 7 பேர் என ரஜினி என்று குதர்க்கமாக கேட்டார். பிறகு, பாஜக ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கும் தெளிவற்ற பதிலை அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில், இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருப்பது குறித்து தெரியாமல் இருக்க நான் முட்டாள் அல்ல என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி கலைவானர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான கேள்விக்கு ரஜினி நேற்று ஒரு பதிலும், இன்று வேறு பதிலும் தெரிவித்திருக்கிறார். இங்கு, மக்களே எஜமானர்கள். அரசியல் பொறுத்தவரையில் ரஜினி ஹீரோவா அல்லது ஜீரோவா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
மாநில அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் உகந்த நிலையை ஏற்படுத்திக்கு கெள்வதற்கான எண்ணம் மட்டுமே தமிழக அரசுக்கு உள்ளது. மற்றபடி எந்த கட்சி பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.