இளவரசியை சந்தித்த மதுசூதனன்! - அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அப்போலோ ! - Exclusive

பேரப் பிள்ளைகளுடன் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடிவிட்டு சிறைக்குச் சென்றுவிட்டார் இளவரசி. 'முதல்வர் தரப்பினருடன் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, தனியார் மருத்துவமனையில் இளவரசியை சந்தித்துப் பேசியிருக்கிறார் மதுசூதனன்' என்கின்றனர் அதிமுகவினர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இதுவரையில் இரண்டு முறை பரோலில் வந்திருக்கிறார் சசிகலா. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் பரோலில் வந்திருந்தார். அதன்பிறகு நடராஜன் இறப்புக்காக அவர் தஞ்சாவூர் வந்திருந்தார்.

ஆனால், இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒருமுறைகூட இளவரசி பரோலில் வந்தது இல்லை. அவரது சொந்த அண்ணன் வடுகநாதன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் இளவரசி.

கடந்த மாதம் 25-ம் தேதி 15 நாள் பரோல் விடுப்பில் வெளியில் வந்தார் இளவரசி. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் ஜெயராமன் வீட்டிலும் தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா வீட்டிலும் தங்கியிருந்து தனிப்பட்ட வேலைகளைக் கவனித்து வந்தார். இந்த இரண்டு வீடுகளில் மட்டுமே தங்குவதற்கு அவருக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு காலத்தில் வடுகநாதனின் உடல்நலமும் தேறிவிட்டது. அதேநேரம், கடுமையான காதுவலியால் அவதிப்பட்டு வந்தார் இளவரசி. அதற்கான சிகிச்சையும் நடந்து முடிந்துவிட்டது.

இதுதொடர்பாகப் பேசும் இளவரசி குடும்பத்தார், " பேரக்குழந்தைகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார் இளவரசி. அவர்களைப் பிரிந்து சிறையில் இருப்பதால் மிகுந்த வேதனையில் இருக்கிறார். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை பாதிப்பு என உடல் உபாதைகளும் ஒன்று சேர்ந்துவிட்டது.

பேரக் குழந்தைகளை சிறைக்கே வரவழைத்து அவ்வப்போது பார்த்து வருகிறார். இந்தமுறை பரோலில் வந்தபோது, வரவு செலவு கணக்கு, தினகரன் தரப்பின் எதிர்ப்பு எனப் பல விஷயங்களை அவரது கவனத்துக்குக் கொண்டனர்.

இதில் ஆச்சரியமான விஷயம் ஒன்றும் நடந்தது. கடந்த சில மாதங்களாக கடுமையான காது வலியில் அவதிப்பட்டு வந்தார் இளவரசி. இதற்காக, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சென்றார். அதேநேரம், அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனனும் அப்போலோவுக்கு வந்திருந்தார்.

தீபாவளிக்குச் சில நாள்களுக்கு முன்பாக இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் பரஸ்பரம் வணக்கம் வைத்துக் கொண்டனர். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்துத் தகவல் இல்லை.

அதேநேரம், கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல், இரட்டை இலை தொடர்பான விவகாரங்களில் அவைத்தலைவர் எடுக்கக் கூடிய முடிவு என்பது மிக முக்கியமானது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவைத் தலைமை தாங்க வருமாறு அழைத்தது மதுசூதனன்தான்.

தற்போது பன்னீர்செல்வம் தரப்பினருக்கு ஆளும்கட்சி தரப்பில் பெரிதாக எந்த முக்கியத்துவமும் கிடைப்பதில்லை. இதனால் ஓ.பி.எஸ்ஸை நம்பிச் சென்றவர்கள் மிகுந்த ஆதங்கத்தில் உள்ளனர். மீண்டும் இளவரசி மூலமாக சசிகலாவுக்குத் தூது அனுப்புவதாகவே பார்க்க முடிகிறது'' என்கின்றனர்.

-அருள் திலீபன்

More News >>