உயிரே போனாலும் எடப்பாடி பக்கம் போக மாட்டேன்! - ஆவேசப்பட்ட நாஞ்சில் சம்பத் Exclusive
அரசியல் மேடைகளில் நாஞ்சில் சம்பத்தின் முழக்கம் அண்மைக்காலமாக தென்படவில்லை. தினகரனுடன் முரண்பட்டவர், எந்தக் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் மௌனம் காக்கிறார்.
`மீண்டும் தினகரனுடன் இணைவார்' என எதிர்பார்க்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மாவட்டம்தோறும் பம்பரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் நாஞ்சில் சம்பத்.
தினகரனின் புகழ்பாடும் வேலைகளைச் சரியாகச் செய்து வந்தனர் சம்பத்தும் புகழேந்தியும். இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இவர்கள் இருவரும் மேடைகளில் முழங்கி வந்தனர்.
சிறையில் இருந்து தினகரன் வந்த சில மாதங்களிலேயே அவருடன் முரண்பட்டார் சம்பத். கட்சி மேடைகளில் இடம் கொடுக்காமல், கீழ்வரிசையில் சம்பத்தை அமர வைக்கும் வேலைகள் நடந்தன.
இதனை சம்பத் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருகட்டத்தில், 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் தினகரன். ' திராவிடமும் அண்ணாவும் கட்சிப் பெயரில் இல்லை. இவை இரண்டும் இல்லாத இடத்தில் இருக்க விரும்பவில்லை. இனி யாருக்கும் கொடி பிடிக்க மாட்டேன். பட்டப்பகலில் பச்சைப் படுகொலை செய்துவிட்டார் தினகரன். இனி அவரோடு மட்டுமல்ல, எந்தக் கட்சியிலும் இணைய மாட்டேன்' என ஆவேசத்தோடு பேட்டியளித்தார் நாஞ்சில் சம்பத்.
இதையடுத்து, மாவட்டம்தோறும் இலக்கிய மேடைகளில் தென்பட்டு வந்தார். இதுகுறித்துப் பேசும் சம்பத் ஆதரவாளர்கள், '' அவரால் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. வைகோவுக்குப் போர்வாளாக நீண்டகாலம் இருந்தார். அ.தி.மு.கவில் அவரை நல்ல இடத்தில் வைத்திருந்தார் ஜெயலலிதா. அதன்பிறகு சசிகலாவும் மிகுந்த பாசத்துடன் அவரை அணுகினார். தினகரனுடன் இருக்கும் ஜனா போன்றவர்களால்தான் மனம் மாறினார் நாஞ்சில் சம்பத். இப்போது எந்தக் கட்சியிலும் சேராமல் அமைதியாக இருக்கிறார். தேர்தல் காலம் நெருங்குவதால் அரசியல் மேடைகளில் பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார். ஆனால், அதைப் பற்றி வெளிப்படையாகப் பேச அவர் விரும்பவில்லை. தி.மு.க உள்பட பல கட்சிகளில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.
ஆளும்கட்சியில் இருந்து பேசிய சில நிர்வாகிகள், `புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட திராவிடமும் அண்ணாவும் இங்கேதான் இருக்கிறது. உங்கள் குரல், கழக மேடையில் ஒலிக்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்தனர். இதனையும் நிராகரித்துவிட்டார் சம்பத்.
நேற்று முன்தினம் அவரிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், ` என்னண்ணே...அ.தி.மு.க பக்கம் போகப் போறீங்களா?' எனக் கேட்டதும் கொந்தளித்துவிட்டார் சம்பத். ' உயிரே போனாலும் எடப்பாடி பக்கம் போக மாட்டேன்' எனக் கூறிவிட்டார். இதனை அந்த நிர்வாகி எதிர்பார்க்கவில்லை. விரைவில் தினகரன் பக்கம், சம்பத் வருவார் என்கின்றனர் அமமுகவினர்.
- அருள் திலீபன்